9. இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக.
10. வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
11. இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
12. அப்படியே தேசத்தில் அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.
13. ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.
14. அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
15. இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக.
16. அதின் அளவுகளாவன; வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம்.