1. கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும்,
2. தாணின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும்,
3. ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும்,
4. நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும்,
5. மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,
6. எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும்,
7. ரூபனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக.
8. யூதாவின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருக்கும்; இது, இருபத்தையாயிரங்கோல் அகலமும், கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
9. இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக.
10. வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
11. இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
12. அப்படியே தேசத்தில் அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.
13. ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.