2. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.
3. இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான் என்றார்.
4. பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.
5. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையும் குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து, உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,
6. இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்.