எசேக்கியேல் 44:17-30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

17. உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது, சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொள்வார்களாக; அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனை செய்கையில், ஆட்டுமயிர் உடுப்பைத் தரிக்கலாகாது.

18. அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது.

19. அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.

20. அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.

21. ஆசாரியர்களில் ஒருவனும், உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.

22. விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாளாகிய கன்னிகையையாகிலும் ஒரு ஆசாரியரின் மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணலாம்.

23. அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப்போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்.

24. வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள்.

25. தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன், புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களில் ஒருவனும் செத்த ஒருவனிடத்தில் போய்த் தீட்டுப்படலாகாது.

26. அவன் சுத்திகரிக்கப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாள் எண்ணப்படவேண்டும்.

27. அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலம் இருக்கிற உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிற நாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தக்கடவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

28. அவர்களுக்குரிய சுதந்தரம் என்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நானே அவர்கள் காணியாட்சி.

29. போஜனபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் புசிப்பார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை பண்ணப்பட்டதெல்லாம் அவர்களுடையதாயிருப்பதாக.

30. சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான பொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.

எசேக்கியேல் 44