1. பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம்.
2. வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.
3. பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.
4. பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.
5. பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.
6. இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது.
7. உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.
8. மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறுபெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது.
9. புறம்பே சுற்றுக்கட்டுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாயிருந்தது; ஆலயத்துக்கு இருக்கும் சுற்றுக்கட்டுகளின் மாளிகையிலே வெறுமையாய் விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.