17. என் மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.
18. நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்கள் மேய்ச்சல்களில் மீதியானதை உங்கள் கால்களால் மிதிக்கலாமா? தெளிந்த தண்ணீரைக் குடித்து மீதியாயிருக்கிறதை உங்கள் கால்களால் குழப்பிப்போடலாமா?
19. என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ?
20. ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
21. நீங்கள் பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடைகளினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியினாலே,
22. நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
23. அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.
24. கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
25. நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.
26. நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.
27. வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.