7. இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்.
8. இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்.
9. உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார்.
10. பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,
11. நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
12. அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.
13. ஒன்றோடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்.
14. ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.
15. கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.