1. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2. இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,
3. அதை நோக்கி: கர்த்தருடைய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரத்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே,
4. நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீ குற்றஞ்சுமந்ததாகி நீ உண்டுபண்ணின உன் நரகலான விக்கிரகங்களால் நீ தீட்டுப்பட்டு, உன் நாட்களைச் சமீபிக்கப்பண்ணி, உன் வருஷங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் புறஜாதிகளுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன்.
5. உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள்.
6. இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள்.
7. உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.
8. நீ என் பரிசுத்த வஸ்துக்களை அசட்டைப்பண்ணி, என் ஓய்வு நாட்களை பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்.
9. இரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்.
10. தகப்பனை நிர்வாணமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப் பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்.
11. உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்.
12. இரத்தஞ்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னைமறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.