2. அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.
3. அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
4. இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.
5. அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷசாயலாயிருந்தது.
6. அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.
7. அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.
8. அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷகைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.
9. அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
10. அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நாலும் எருதுமுகமும் கழுகுமுகமுமாயிருந்தன.
11. அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
12. அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
13. ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.
14. அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
15. நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
16. சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.