15. நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.
16. இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும் பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டைளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.
17. கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும், அவர் கற்பனைகளையும், அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.
18. கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,
19. நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.