1. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.
2. உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும்,
3. அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும்
4. எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,
5. நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும் அவர் உங்களுக்கு வனாந்தரத்தில் செய்ததையும்,
6. பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
7. கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது.
8. ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,
9. நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.