ஆதியாகமம் 50:1-10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான்.

2. பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.

3. சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் செல்லும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கங்கொண்டாடினார்கள்.

4. துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்,

5. என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கபண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்லி, ஆணையிடுவித்துக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

6. அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீ போய், அவரை அடக்கம்பண்ணி வா என்றான்.

7. அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான். பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்துதேசத்திலுள்ள சகல பெரியோரும்,

8. யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும் மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள்.

9. இரதங்களும் குதிரைவீரரும் அவனோடே போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.

10. அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான்.

ஆதியாகமம் 50