13. அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான்.
14. அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.
15. பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.
16. அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான்,
17. பார்வோன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
18. அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தது.
19. அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை.
20. கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது.
21. அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
22. பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
23. பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
24. சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான்.
25. அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்று தான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.
26. அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே.