ஆதியாகமம் 41:1-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்.

2. அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.

3. அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.

4. அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.

5. மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம் விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.

6. பின்பு, சாவியானதும் கீழ்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.

7. சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.

8. காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று.

9. அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனை நோக்கி: நான் செய்த குற்றம் இன்றுதான் என் நினைவில் வந்தது.

10. பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,

11. நானும் அவனும் ஒரே இராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம்.

12. அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான்.

13. அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான்.

14. அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.

15. பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.

16. அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான்,

17. பார்வோன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.

ஆதியாகமம் 41