4. நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான்.
5. அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
6. எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.
7. அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,
8. அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்.
9. தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்.