12. இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
13. அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
14. அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.
15. அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
16. செசரியா பட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டுவந்தார்கள்.
17. நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
18. மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
19. அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.
20. அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
21. புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
22. இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.