10. இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிட மாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.
11. இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,
12. இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.
13. முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேரும் அறுப்பு நாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,
14. தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.
15. தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின் மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
16. அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
17. கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
18. யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான்.
19. இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.