2 சாமுவேல் 12:7-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

7. அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

8. உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

9. கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

10. இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

11. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

12. நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.

13. அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.

14. ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.

15. அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.

16. அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளே போய், இராமுழுவதும் தரையிலே கிடந்தான்.

17. அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

18. ஏழாம் நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்: பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.

2 சாமுவேல் 12