9. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.
10. அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
11. அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
12. மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
13. ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.
14. கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
15. நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,
16. பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.
17. இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?
18. நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.
19. என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.
20. எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.