36. அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.
37. அப்பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
38. எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான்.
39. ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலேபோய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.