1. அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
2. அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும் அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.
3. மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தை விட்டு அகற்றும்படி கர்த்தருடைய கட்டளையினால் அப்படி நடந்தது.
4. அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.