4. எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,
5. கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,
6. தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.
7. இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என்நாமத்தை என்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லிக் குறித்த ஆலயத்திலே அவன் பண்ணின தோப்புவிக்கிரகத்தை வைத்தான்.
8. நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.