2 இராஜாக்கள் 10:9-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

9. மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?

10. ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.

11. யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச் சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்டான்.

12. பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது,

13. யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.

14. அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டுபேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.

15. அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,

16. நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.

17. அவன் சமாரியாவுக்கு வந்தபோது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவும் சங்காரஞ்செய்தான்.

18. பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.

2 இராஜாக்கள் 10