1. தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
2. இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான்.
3. அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.
4. அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்கவேண்டும் என்றும்,
5. நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதி செய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,
6. அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.
7. கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
8. லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
9. சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.
10. யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.
11. யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.