1 நாளாகமம் 11:5-20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

5. அப்பொழுது ஏபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.

6. எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.

7. தாவீது அந்தக் கோட்டையில் வாசம்பண்ணினபடியினால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.

8. பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.

9. தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.

10. கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்,

11. தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்றுபோட்டான்.

12. இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.

13. பெலிஸ்தர் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், ஜனம் பெலிஸ்தரைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடே அங்கே இருந்தான்.

14. அப்பொழுது அவர்கள் இந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தரை மடங்கடித்தார்கள்; அதினாலே கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.

15. முப்பது தலைவரில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் கெபியிலிருக்கிற தாவீதினிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் பாளயம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது,

16. தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது.

17. தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

18. அப்பொழுது அந்த மூன்றுபேர் பெலிஸ்தரின் பாளயத்திற்குள் துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:

19. நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.

20. யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை மடங்கடித்ததினால் இந்த மூன்றுபேரில் பேர்பெற்றவனானான்.

1 நாளாகமம் 11