1 சாமுவேல் 25:9-27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

9. தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.

10. நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.

11. நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல்பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.

12. தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.

13. அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்து விட்டார்கள்.

14. அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.

15. அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.

16. நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்.

17. இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.

18. அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும் இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,

19. தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.

20. அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கி வந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.

21. தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமை செய்தான்.

22. அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயை முதலாய் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான்.

23. அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,

24. அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும் பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேசவேண்டும்.

25. என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பேர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பேர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை.

26. இப்பொழுதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.

27. இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.

1 சாமுவேல் 25