1. சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,
2. கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்.
3. கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.
4. நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்,
5. இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
6. நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,
7. நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் இருப்பார்கள்.
8. அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு: கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
9. அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டு. வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.
10. சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே,
11. தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.
12. ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.
13. அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கி வருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.
14. ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.