46. பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டு போகும்போது,
47. அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,
48. தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது,
49. உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து,
50. உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக.
51. அவர்கள் எகிப்தென்கிற இருப்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்தரமுமாய் இருக்கிறார்களே.
52. அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக.
53. கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, உம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம்பண்ணினான்.
54. சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து,
55. நின்றுகொண்டு, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடே சொன்னது:
56. தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை.
57. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து,
58. நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும் கைக்கொள்ளுகிறதற்கும், நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாராக.
59. கர்த்தரே தேவன், வேறொருவரும் இல்லையென்பதைப் பூமியின் ஜனங்களெல்லாம் அறியும்படியாக,
60. அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது ஜனமாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்துக்குத்தக்கதாய் விசாரிப்பதற்கு, நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணின இந்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக.
61. ஆதலால் இந்நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றான்.
62. பின்பு ராஜாவும் அவனோடே இருந்த இஸ்ரவேலர் அனைவரும், கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.