14. யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.
15. அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பதிரண்டுபேர்; அவர்களுப்பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான்.
16. அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறி கொண்டிருந்தார்கள்.
17. மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன்தண்டாகப் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனுஷர்: சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.
18. அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.
19. மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது,
20. அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடி போனார்கள்; இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின் மேல் ஏறிச் சில குதிரை வீரரோடுங்கூடத் தப்பியோடிப்போனான்.
21. இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும், இரதங்களையும் முறிய அடித்து, சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டினான்.
22. பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.
23. சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.
24. அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி;
25. நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சேனையையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய்க் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.