9. ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டு விசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,
10. அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.
11. ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.
12. ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.
13. ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார்.
14. கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்.
15. தாவீது ஏதோமில் இருக்கும்போது படைத்தலைவனாகிய யோவாப் ஏதோமிலுள்ள ஆண்மக்களையெல்லாம் சங்கரித்து, வெட்டுண்டவர்களை அடக்கம்பண்ணப்போனான்.
16. அவர்களையெல்லாம் சங்கரிக்குமளவும், தானும் இஸ்ரவேல் அனைத்தும் அங்கே ஆறுமாதம் இருக்கும்போது,
17. ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்திற்குப்போக ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான்.
18. அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடு கொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான்.