21. ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
22. ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
23. பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
24. சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.
25. வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டு வருவார்கள்.
26. சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்துநானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
27. எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
28. சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
29. எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.